Sunday, February 28, 2010

"விண்ணைத்தாண்டி வருவாயா"


நீண்ட நாட்களுக்குப்பின் தமிழில் வந்த சிறந்த காதல் கதை. மன்னிக்கவும் காதல் விதை.

ஆரம்பம்முதல் முடிவுவரை காதல் வெள்ளத்தில் பார்வையாளர்களை மிதக்கவைத்திருக்கிறார் இயக்குனர் கௌதம் மேனன். நிஜத்தை திரையில் வண்ணம் தீட்டியிருக்கிறார் இயக்குனர்.

சிம்பு என்றாலே வம்புதான் என்று பொதுவான கருத்தொன்று நம்மிடையே விண்ணைத்தாண்டி வருவாயா வெளிவரும்வரை இருந்தது. சிம்புவை முழுமையாக மாற்றியிருக்கிறார் கௌதம்.

கொஞ்சம் விவரமாக பேசுவோம்.........

கதாநாயகி த்ரிஷாவின் வீட்டில் கீழ்மாடியில் வாடகைக்கு இருக்கும் சிம்பு குடும்பம், த்ரிஷாவின் குடும்பத்தோடு ஒப்பிட்டு பார்க்கும்போது வசதியில் குறைந்தது. த்ரிஷா ஒரு மலையாள கிறிஸ்தவ பெண். திடிரென ஒருநாள் வீதியில் த்ரிஷாவை கண்ட சிம்பு மனதில் காதல் மலர்கிறது. இளைஞன் ஒருவனிடம் காதல் மலருபோது அவனுள் உருவாகும் மாற்றங்கள், அவன் படும் அவஸ்தைகள், ஒவ்வொன்றும் நிஜத்தின் நிழல்.

அவள் இதயத்திலும் காதல் உருவாகிறது ஆனால் ஏற்றுக்கொள்ள மறுக்கிறாள். காரணம் அவள் குடும்ப சூழல்,சிம்புவைவிட ஒரு வயது அதிகம். ஆனாலும் ஒருகட்டத்தில் த்ரிஷா தனக்குள்ளும் காதல் இருப்பதை சிம்புவிடம் தெரிவிக்கிறார். இருவரும் காதலிக்கிறார்கள். நிஜத்தில் காதலர்கள் எங்கெல்லாம் செல்வார்களோ அங்கெல்லாம் இவர்களும் செல்கிறார்கள். காதல் வீட்டுக்கு தெரியவர பிரச்சனை ஆரம்பிக்கிறது. த்ரிஷா ஒதுங்க நினைக்கிறார். துரத்தும் சிம்புவின் நடிப்பு நிஜம். ஒரு உதாரணம்.... த்ரிஷாவின் வீட்டுக்கு வெளியில் நின்றுகொண்டு,த்ரிஷாவுக்கு தனது கையடக்க தொலைபேசியிலிருந்து தொடர்ச்சியாக அழைப்பெடுத்தாலும் த்ரிஷா அழைப்பை துண்டித்துகொண்டே இருக்க, அந்த கோபத்தில் கையிலிருந்த தொலைபேசியை நிலத்தில் அடித்துவிட்டு அங்கிருந்து வெளியேறும் சிம்புவின் நடிப்பில் உண்மை மட்டுமே இருந்தது.

சர்வதேச விருதுகளை வென்றபின் ரஹ்மான் பணியாற்றிய முதல் தமிழ் திரைப்படம். அதிக கவனமெடுத்திருக்கிறார். இசையும் கதையும் ஒன்றரக்கலந்திருப்பது சிறப்பு. பாடல்களும் அருமை. ஏன் இதயம் உடைத்தாய் பாடல் சிம்புவின் இதயம் உடையும்முன்னே வந்துவிட்டது. த்ரிஷா நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார். த்ரிஷாவின் நடிப்பில் ஜோதிகா தெரிகிறார். சிம்புவின் நண்பராக வருபவர் எல்லோர் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார். ஒளிப்பதிவில் தெளிவு, படத்தொகுப்பில் அமைதி, இவையெல்லாம் மேலதிக பலம்.

இறுதியில் சினிமாவையும் நிஜத்தையும் வேறுபடுத்தி காண்பித்தது தனி அழகு.[சாதாரணமானவர்களுக்கும் புரியும்படியாக அமைத்திருக்கலாம்]

இறுதிக்காட்ச்சியை பார்க்கும்போது கவனம் சிதறினால், முடிவில் என்ன நடந்தது? சேர்ந்தார்களா? பிரிந்தார்களா? என்ற சந்தேகத்துடன்தான் வீடு திரும்ப நேரிடும்.

இல்லை இல்லை என்றாலும், கௌதம் மேனனின் உண்மைக்கதைதான் விண்ணைத்தாண்டி வருவாயா என்பது உண்மை.

"விண்ணைத்தாண்டி வருவாயா" பலரது வாழ்க்கை.........

Monday, February 22, 2010

கலையுலகை இருளவைத்துவிட்டார், ஸ்ரீதர் பிச்சையப்பா!!!!


என்னை மிரளவைத்த ஸ்ரீதர் பிச்சையப்பா,கலையுலகை இருளவைத்துவிட்டார்.
எல்லோருக்கும் இவரை ஒரு நகைச்சுவை நடிகராக மட்டுமே தெரியும். ஆனால், இவருக்கு கலையறிவு அதிகம். திறமையான ஓவியர்[இவரது இல்லத்தில் ஒரு தனி அறை உள்ளது. அந்த அறையின் பெயர் சித்திர வதைக்கூடம். அவர் வரைந்த அனைத்து ஓவியங்களும் அங்கு வைக்கப்பட்டுள்ளது] சிறந்த எழுத்தாளர், ஆழமான அர்த்தமுடைய கவிதைகளை படைத்தவர், நல்ல நடிகர், பாடகர், திறமையான பேச்சாளர், இவ்வாறு அடுக்கிக்கொண்டே போகலாம்.....

அவருடன் பழகிய நாட்கள் என்வாழ்நாளில் மறக்கமுடியாதவை.

சூரியன் வானொலியில் நான் வழங்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் கேட்கும் ஒருவராகவும் என்னை கவர்ந்தார். அவர் இறந்த செய்தி கேள்விபட்டதும் என் நினைவுக்குவந்தது கடந்த SEPTEMBER மாதம் எனது பிறந்தநாளை முன்னிட்டு அவர் எனக்கு அனுப்பிய வாழ்த்தட்டை.

உங்களை சந்திக்கவரும்போது, நவநீதனும் பிரபல திறமையான ஒலிபரப்பாளர் என்ற பெயர்பெற்று வருகிறேன். எனக்காக காத்திருங்கள்.........

நன்றி ஸ்ரீ அண்ணா......

நீங்கள் இல்லாத கலை, களை கட்டுமா???????????

Thursday, February 4, 2010

அஜித்தின் "அசல்" N. கருத்து.........




அஜித்தின் அசல் இன்றுதான் வெளியிடப்படுகிறது. ஆனாலும் நேற்று இரண்டு சிறப்பு காட்சிகள் காண்பிக்கப்பட்டன. நான் முதல் காட்சியை தெஹிவளை concord திரையரங்கில் பார்த்தேன்!

எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. அஜித் சரண் பரத்வாஜ் என்ற மூன்று சிகரங்கள் இதுவரை இணைந்து தந்த அத்தனை படங்களும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டன. 'அசல் கூட்டணி அசத்தல் கூட்டணி' திரையரங்குக்குள் செல்லும்போது வெளியில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில், கதை இயக்கம் இரண்டிலுமே அஜித்தின் பெயரும் பிரசுரமாகியிருந்தது. ஆஹா ஏனைய நடிகர்கள் கதைக்குள் மூக்கை நுழைத்து கதையின் போக்கை மாற்றி சொதப்புவதுபோல் தல அஜித்தும் புறப்பட்டுவிட்டாரா? என்று நானும் எனது நண்பனொருவனும் ஒரு நிமிடம் நின்று யோசித்துவிட்டு உள்ளே நுழைந்தோம்..... திரைப்படம் ஆரம்பிக்கும்போது அஜித்தின் பெருமை சொல்லும் விதத்தில் திரையில் வழமையாக காண்பிக்கப்படும் எதுவும் இல்லை. சாதாரணமாக அஜித்குமார் என்று திரையின் ஓரத்தில் காண்பிக்கப்பட்டதும், எனது நண்பன் என்னை தட்டி காதருகில் வந்து அஜித் தலையிட்டு இப்படி செய்தது உண்மையில் பாராட்டப்படவேண்டும் என்றான்!

காட்சியமைப்புகள் படமாக்கப்பட்ட இடம், பாடல்கள் படமாக்கப்பட்ட இடம்(ஒளிப்பதிவு புதியவர்,புதுமை திரையில் தெரிகிறது) நடிகர்கள், இவை எல்லாம் அழகாகத்தான் இருக்கின்றது. கதை சாதரணமான மசாலாத்தனமானது. வேகம் அதிகரிக்கப்பட்டிருக்கலாம்.. பாடல்கள் முழுமையாக இல்லை. படத்தொகுப்பாளர் Antonyயின் முடிவுகளில் ஒன்றாக இருந்திருக்கலாம்.{கதையின் வேகத்துக்காக} எங்கே எங்கே மனிதன் எங்கே பாடல் படத்தில் இல்லை. சண்டை காட்சிகளில் புதிய வேகம் தெரிந்தாலும்,ஒருசில இடங்களில் யதார்த்தத்தை மறைத்து மசாலாத்தனம் தலைகாட்டுகிறது.{கொஞ்சம் கவனித்திருக்கலாம்} பிரதான வில்லன் சேட்டும்,(இது அவனது பெயர்) அவனது வில்லத்தனமும், அடியாட்களும் பிரமாண்டமாக காண்பிக்கப்படுகின்றன. ஆனால் தல அஜித், பாதுகாப்பு பலமாக இருக்கும் வில்லனின் கோட்டைக்குள் எந்த இடையூறும் இல்லாமல் உள்ளே புகுந்து வில்லனை கொன்று எல்லோரையும் மீட்டு மீண்டும் வெளியில் வருவதுபோன்ற காட்சிகளை மட்டுமே குறிப்பிடுகிறேன். அஜித் எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாகவும் அழகாகவும் நடித்திருக்கிறார். நன்றாக நடனமாடியுமிருக்கிறார். சமீரா ரெட்டி நடிப்பில் சிறப்பு. வழமைக்கு மாறாக பாவனா அழகாகத்தெரிகிறார்(என் கண்களுக்கு) பரத்வாஜின் பின்னணி இசை அதிரடி. பாடல்களும் பிடித்திருக்கின்றன. அஜித்தின் காதலி யார் என்ற போட்டியில் சமீரா அநியாயத்துக்கு சமாதானம் ஆகுறார்.இப்படியும் பெண்கள் இருக்கிறார்களா?இந்த கேள்வி சரணுக்கானது. பிரபு அளவுக்கு அதிகம் திரையில் தோன்றவில்லை.

மொத்தத்தில், முழுக்குடும்பமும் ஒன்றாக அமர்ந்திருந்து பார்க்கக்கூடிய திரைப்படம்தான் அசல்.

"அசல் அஜித்திற்கு இல்லை நசல்"